முதல் பாகம் இங்கே....
இரண்டாம் பாகம் இங்கே....
மூன்றாம் பாகம் இங்கே....
“இது தான் பீச்! நல்லா பார்த்துக்குங்கோ” என்றான் அம்பி
“ஆகா, ஆகா, ரொம்ப ஆனந்தமா இருக்கே, ஜனங்க எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்கா, எனக்கு சந்தோஷத்துல கூத்தாடனும் போல இருக்கே”
“அதெல்லாம் இங்க பண்ணப்படாது, பண்ணினா போலீசுல புடிச்சுண்டு போய்டுவா, கூத்தாடறதுக்கெல்லாம் இங்க தனி இடம் இருக்கு।”
“அப்படியா, நிஜமாவா, என்னை அங்க கூட்டிண்டு போறியா அம்பி। நான் நன்னா கூத்தாடுவேன் தெரியுமா நோக்கு?”
” சாரி மாமா, உங்களையும் என்னையும் அங்க உள்ள விட மாட்டா, எல்லாரும், ஆணும், பெண்ணுமா ஜோடி ஜோடியாத் தான் போகணும்। அதுவும் இந்த மாதிரி டிரஸ் போட்டுண்டு போனேள்னா, வாசல்ல வச்சே அடிச்சுத் துரத்திடுவா.”
“அப்படியா, அய்யோ, திடீர்னு ஜோடிக்கு இப்போ நான் எங்கே போறது?” சோகமானார் கடவுள்।
“சக்தியை அழைத்தாள் வருவாளா?” யோசனையில் ஆழ்ந்தார்
“ஆமா ஏதோ கெட்ட வாடை வருதே காத்துல அது ஏன்” வினவினார் கடவுள் மூக்கைத் தேய்த்தவாறே!
“அதுவா, அதோ அங்க பாருங்கோ! எல்லாரும் மீன் பிடிச்சுட்டுக் காய வச்சிருக்காங்க, வலையெல்லாம் காயப் போட்டிருக்காங்க அது தான், மீன் வாசனை தான் எல்லாம்”
“எனக்கு என்னவோ வயத்தைக் குமட்டறதுடாப்பா॥ “
“அடப் போங்க மாமா! இதுக்கே இப்படிச் சொல்றீங்களே! இங்க “காசிமேடு”ன்னு ஒரு இடம் இருக்கு। அங்க நீங்க கிட்ட போனாலே போறும். அவ்வளவு தான். ஒரு வழியாயிடுவீங்க”
“அப்படியா, ஏன்?”
“ஏன்னா, அங்க தான் மீன்பிடித் துறைமுகம் இருக்கு। அங்க தான் மீனைக் காயவச்சு கருவாடா மாத்தறாங்க. அதுக்கானா கோடௌன்லாம் அங்க தான் இருக்கு. அங்க இருக்கறவங்களும் மனுஷங்க தான! அவங்க எல்லாம் பொறுமையா இல்ல! உங்களால கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்க முடியலையா?. அவ்வளவு சுகவாசியா நீங்க”
“இல்லடா அம்பி! கோச்சுக்காதே, சந்தனம், சாம்பிராணி பன்னீர்னு ஒரே வாசனையோடே இருந்துட்டேனா அதான் ஒண்ணும் முடியலை”
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது…। இடையில் ஒரு குரல்॥
“யோவ் பெரிசு, இன்னா, ......... ன்னா பத்து, ......ன்னா இருவது சரியா! இன்னான்றே,?!” என்றது।
அதிர்ச்சியானார் கடவுள்।
“வாங்கோ மாமா, ஓடிடலாம்। இவாள்லாம்... இவாள்லாம்...” பையன் பயத்தில் உதற ஆரம்பித்தான்.
புதிய நபரை முறைத்துப் பார்த்தார் கடவுள்।
அவருக்கு அந்நபர் மீது கோபம் வரவில்லை। மாறாகத் தான் உமையொரு பாகம் கொடுத்த தோற்றமும், படைப்புக் கடவுளான பிரம்மனின் மீது ஆத்திரமும் ஏற்பட்டது. மானிட உடல் எடுத்து வந்ததால், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய தனது இயலாமையை நினைத்தும் மனம் நொந்தார்.
“இந்தாங்கோ நீங்க கேட்ட பணம், தயவு செய்து இங்கேருந்து போயிடுங்கோ” என்றார் கடவுள் அந்நபரிடம் இரக்கத்துடன்।
” ஆமா, ஆமா, நம்பளை நைசாக் கழட்டி விடு, ஆனா, ஷோக்கா, சின்னப் புள்ளைய தள்ளிக்கினு வந்திருக்கியே, பெரிய ஆள்ப்பா நீ” சொன்ன நபர் அங்கிருந்து வேகமாக நகர...
முரட்டு மீசை மற்றும் உடுப்பு அணிந்த நபர் ஒருவர் அந்நபர் முன்னால் வந்து நின்று....
“ஏய் இன்னாம்மே, டெய்லி எஸ்கேப்பானா விட்டுருவோமா நாங்க, எடு ரூபாயை” அந்த நபர் கதறக் கதற, மொத்தக் காசையும் பறித்துக் கொண்டு போனார் மீசைக்காரர்।
” ஏய் அம்பி என்னடா இதெல்லாம்!” என்றார் கடவுள் வருத்தத்துடன்...
“பிச்சை எடுக்குமாம் பெருமாளு, அத்தைப் பிடுங்குமாம் அனுமாரு! இது தான் மாமா மெட்ராஸ், நீங்க பார்க்கணும்னு நினைச்ச பாற்கடல்। எப்படி ஓ.கேவா”
“அய்யோ வேண்டாம்! வேண்டாம்! நான் எங்கேருந்து வந்தேனோ அங்கேயே போறேன்” சொன்ன கடவுள், “அம்பி! நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா, நான் தான் கடவுள்” என்றார்।
“ஹ! ஹ! இது மாதிரி சொல்லிக்கிட்டு நிறையப் பேரு திரியறாங்க மாமா! ஏன், இங்க கூட ஒருத்தர் கிரீடம் எல்லாம் வச்சுக்கிட்டு, டெய்லி டான்சு ஆடுறாரு, அதுவும் பொம்பளைங்க கூட, கேட்டா அவரு கிருஷ்ணன் அவதாரமாம்। அவர் கைல சங்கு சக்கரம் எல்லாம் இருக்காம். இன்னொருத்தர், தன்னைப் பாக்க வர்ற எல்லார் மேலயும் எச்சிலைத் துப்பிட்டு, ‘உன் பாவம் போச்சுங்கிறாரு’. இன்னொருத்தர் சாரயத்தையும் சுருட்டையும் மாறி மாறிக் குடிக்கிறாரு... ஆமா நீங்க எந்த மாதிரிக் கடவுள்?, எந்த மாதிரி அவதாரம்?” என்றான் அம்பி கிண்டலாய்.
“இல்லையப்பா! நான் தான் நிஜமான கடவுள்”
” ஓகோ சரிதான்! அதை எப்படி நான் நம்புறது। ஏதாவது நம்பற மாதிரி செய்யுங்களேன் பார்க்கலாம்” கிண்டலாய்க் கேட்டான் அம்பி.
“ம்! அற்புதம் அதிசயம் எல்லாம் பண்ணித் தான் கடவுள் தன்னை நிரூபிக்க வேண்டியிருக்கு। எல்லாம் கலிகாலம்! என்ன அற்புதம் பண்ணட்டும், வாயில இருந்து லிங்கத்தை வரவழைக்கட்டுமா!. இல்லை வெறும் காத்துல இருந்து செயின் வரவழைக்கட்டுமா?”
“லிங்கமா, என் கூட படிக்கிற பையனே வாயில இருந்து லிங்கம் எடுக்கறான்। செயின் வரவழைக்கறதெல்லாம் சும்மா ஓல்ட் டிரிக்! வேற ஏதாவது புதுசா॥”
“சரி! சரி! இப்போ உன்னை உங்க ஆத்து மொட்டை மாடிக்கு அழைச்சுண்டு போறேன் சரியா, கண்ணை மூடிக்கோ, என் கையைப் பிடிச்சுக்கோ”
“நிஜம்மாவா! சரி மாமா” அம்பி அரை குறையாகக் கண்ணை மூடிக் கொண்டான்।
’அரைகுறையா மூடப்படாது. இறுக்க மூடிக்கோ...’ சொன்னார் கடவுள்.
அம்பியும் உடனே தனது கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்। கடவுளின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“விஷ்க்” என்று ஒரு சத்தம் கேட்டது। வானில் வேகமாக எங்கோ பறப்பது போலும் தோன்றியது.
திடீரென்று ஏதோ ஒரு சப்தம் கேட்டது॥ அடுத்த கணம்... அம்பியும் கடவுளும், அம்பி வீட்டு மொட்டை மாடியில் இருந்தனர்।
“என்ன அம்பி இப்போ நம்பறியா?”
“மாமா, மாமா நீங்க நிஜமாவே கடவுளா?। இல்லை. சித்தரா!॥ மந்திரவாதியா? அய்யோ... என்னால நம்ப முடியலையே!” அய்யோ..நான் எப்படி.. எப்டி.. இவ்ளோ சீக்கிரம் இங்கே வந்தேன்.. ஆச்சர்யமா இருக்கே... ஆமா, என் வண்டி எங்கே...’
“கீழே பார்”
அம்பி எட்டிப் பார்த்தான் அவன் வண்டி வீட்டு வாசலில் பார்க்க செய்யப்பட்டிருந்தது।
“அய்யோ மாமா! மாமா! என்னால நம்ப முடியலையே! நிஜமாவே கடவுள் இப்படி எல்லாம் வருவாரா என்ன? கடவுளுக்கு நிறைய கை,கால், முகமெல்லாம் இருக்கும் சொல்வாளே... உங்களுக்கு அதெல்லாம் நம்ப முடியல்லையே! எங்க ஆத்துக்கு பிரமாணார்த்தம் சாப்பிட வர கோடி ஆத்து கோபால அய்யார் மாதிரின்னா நீங்க இருக்கேள்॥ அய்யோ ரொம்ப ஆச்சர்யமா இருக்கே, என்னால நம்பவே முடியலையே!” அம்பி அரற்றினான்।
“அம்பி! பரவாயில்லை நீ நம்ப வேண்டாம்! ஆச்சர்யப்படவும் வேண்டாம். எல்லாம் ஒரு கனவுன்னே வச்சுக்கோ. ஆமா, கடவுளை நீ நம்பவே வேண்டாம். உன்னை நீ முழுசா நம்பினாப் போறும். கடவுள் பேரைச் சொல்லி, நாட்டை ஏமாத்திக்கிட்டு இருக்கும் போலி சாமியார்களையும், வெத்து ஆன்மீகவாதிகளையும் விட, கடவுள் இல்லைன்னு சொல்ற ஒரு நாத்திகன் எவ்வளவோ மேல். நாத்திகனா இருக்கறதுல எந்த தப்பும் இல்ல. போலி ஆத்திகனா இருக்கறதை விட உண்மையான நாத்திகனா இரு।”
சொல்லி விட்டுக் கடவுள் மறைந்து போக...
அம்பி அப்படியே திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்।
(முற்றும்)
இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Super comedy story. weldon.
srilatha
Post a Comment