Sunday, January 3, 2010

புத்தகக் காட்சியில் மடையன் - முதல் நாள்

எப்போதுடா வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தக்காட்சி இந்த முறை சீக்கிரமே வந்ததில் ஒரு புறம் மகிழ்ச்சி. மற்றொருபுறம், மாசக்கடைசியாக இருக்கிறதே என்று சின்னதொரு வருத்தம். இருந்தாலும் எப்படியோ மானேஜர் கிழத்தை ஏமாற்றி முதல்நாளே ஆறரைமணிக்கு எல்லாம் சந்தையில் ஆஜர்.

வாசலில் பெரிய போலீஸ் பட்டாளம் நின்றிருந்தது. கொண்டு போயிருந்த பையை, பேண்ட் பாக்கெட் எல்லாவற்றையும் நன்றாகத் தடவிப் பார்த்து உள்ளே அனுப்பினார்கள். டிடெக்டர் எல்லாம் வைத்து செக் செய்தார்கள். ஏதாவது சத்தம் போடும் என்று நான் முன்னாலே எதிர்பார்த்து கையிலேயே செல்போனை வைத்திருந்தேன். ஆனாலும் பையில் ஏதோ விபரீத சத்தம் வந்ததும் திறந்து காட்டச் சொன்னார்கள். டிபன் பாக்ஸ் அருகே டிடெக்டரைக் காட்டியதும் அது வெகு தீவிரமாக அலறியது. தீவிரவாதியோ என்று சந்தேகப்பட்ட ஒரு காவல்காரர் என்னை முறைத்துப் பார்த்தவாறு பின்னால் வந்து நின்று கொண்டார். மற்றொரு பெண்மணி டிபன் பாக்ஸைத் திறந்து காட்டச் சொன்னார். காட்டினேன். உள்ளே ஆபிஸ் சாவிக் கொத்து இருந்தது. ஆபிஸை மூடிவிட்டு எல்லா சாவிகளையும் அதில் போட்டு விட்டு வீட்டிற்குக் கிளம்புவது என் நெடுநாளைய வழக்கம். (ஏதோ ஒருவித பாதுகாப்பு மனநிலை மற்றும் அடுத்த நாள் சாவிகளை மறக்காமல் அலுவலகம் எடுத்துச் செல்லவும் வசதியாக இருக்கும் என்ற ஒரு எண்ணம். அது சரியோ, தவறோ தெரியவில்லை). என்னை ஒரு மாதிரியாக முறைத்துப் பார்த்த போலிஸ்காரர்கள் ஏதோ முணுமுணுத்தவாறு உள்ளே அனுப்பினர்.

அதற்குள் என்னைத் தொடர்ந்து பின்னால் வந்தவர்கள் எல்லாம் ஒருமாதிரியாக என்னைப் பார்த்து விட்டுச் சென்றனர் (என்ன நினைத்தார்களோ...)

நான் உள்ளே சென்றபோது அரங்கில் மஞ்சள் துண்டுடன், மங்களகரமாக அமர்ந்து கொண்டு தலைவர் பேசிக் கொண்டிருந்தார். அருகே சென்று பார்க்கலாம் என்று போனால் காமெராக்காரர்களே முற்றிலுமாக கூட்டத்தைப் பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டிருந்தனர். அதனால் கூட்டத்தின் பின்னால் குழுமியிருந்த ஒரு கும்பலுல் சென்று நான் என்னை இணைத்துக் கொண்டேன்.

’வேட்டைக்காரன் மொக்கையை விட இது பெரிய மொக்கையா இருக்கு’ என்றார் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர்.

‘ஆமா, அது என்ன குருவி, காக்கா, எறா, சுறா, வேட்டைக்காரன்னு பேர் வக்கிறாரு அவரு...’ என்றார் இன்னொரு இளைஞர்.

‘யாருக்குத் தெரியும். ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்னவோ..’ என்றார் உடன் வந்திருந்த இளைஞர் நமட்டுச் சிரிப்புடன்

அதற்குள் முதல்வர் பேச்சை முடித்துவிட தேசிய கீதம் அறிவித்தார்கள். சிலர் எழுந்தும் எழாமலும் இருந்தனர். ஒருசிலர் கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே புத்தக்காட்சியின் வாசலில் வந்து நின்று கொண்டனர்.

முதல்வர் ஒருவேளை உள்ளே வருவார் என்று எதிர்பார்த்து அதிகாரிகள் தயாராக இருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. கூட்டம் உள்ளே போக முண்டியடித்தது. மற்றொரு நுழைவுவாயிலும் மக்கள் கூட்டமாக ஆர்வமாக உள்ளே போக நின்று கொண்டிருந்தனர்.

அன்று அனுமதி இலவசம் என்று தெரியாமல் டிக்கட் கவுண்டர் முன்னால் ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது.

பின்னர் உள்ளே அனுமதித்தார்கள். முதல் நுழைவுவாயில் வழியாக நுழைந்தவர்கள் ஒரு புறமும், இன்னொரு நுழைவுவாயில் வழியாக நுழைந்தவர்களை மற்றொரு புறமும் போகும்படிச் சொல்லி காவல்துறையினர் நடுவில் வழிமறித்து நின்று கொண்டனர்.

நானும் உள்ளே நுழைந்தேன். ’கல்யாணி பப்ளிகேஷன்ஸ்’ என்ற பெயர் மங்களகரமாகக் கண்ணில் பட்டது.

(தொடரும்)