திடீரென இருக்கையிலிருந்து எழுந்த சிவபெருமான் வேகவேகமாக எங்கோ கிளம்ப முற்படவும், பார்வதிஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“என்ன விசேஷம், எங்கே பயணம்?..” சற்று பவ்யமாக வினவினாள்.
‘சிவத்தைப் பார்க்க அனைவரும் இங்கு வந்து தவமிருக்க, இவர் வேறு எங்கோ செல்கிறாரே, என்னவாக இருக்கும்’ என்பது தான் உமையின் மனத்தில் இருந்த கேள்வி.
“பூவுலகம் தான் வேறென்ன!” சிவம் பதிலளித்தது.
“அய்யோ! அங்கேயா?” அச்சத்துடன் வெளிப்பட்டது பார்வதியின் குரல்.
“ஆமாம்! ஏன்?”
“ஏற்கனவே ஒருமுறை சென்று விட்டு பட்ட பாடு போதாதா? மறுபடியுமா?”
“இல்லை! இப்பொழுது உலகம் ரொம்ப மாறி விட்டது. நீ நினைக்கின்ற மாதிரி இல்லை. பூவுலகம்”
“நிஜமாகவா?! அப்படியானால் சரி! நானும் வருகிறேன்!”
“வேண்டாம்! வேண்டாம்!”
“இல்லை! நான் வரத்தான் போகிறேன்”
“வேண்டாம் சக்தி! நான் சொல்வதைக் கேள்! தேவைப்பட்டால் நானே உன்னை அழைக்கிறேன்”
“சரி ! தாங்கள் அழைக்கும் பொழுதோ அல்லது என் உதவி தேவைப்படும் பொழுதோ நான் அவசியம் அங்கு வருவேன்”
“நல்லது”
புறப்பட்ட சிவன் நேராக வந்து இறங்கியது சென்னையில் உள்ள ஒரு பழங்காலக் கோயில் ஒன்றில். உடனே தனது ரூபத்தை ஒரு வயதான மனிதர் போல் மாற்றிக் கொண்ட சிவன், மெல்ல கோயில் குருக்களை அணுகிப் பேச்சுக் கொடுக்கலானார்.
“என்ன சுவாமின்! சௌக்கியம் தானே!”
“ம்ம் சௌக்யத்துக்கென்ன குறை! கண்ணு தான் வர வர சரியாத்தெரியலை! நீங்க யாருன்னு சரியாப் பிடிபடலையே!”
“நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருக்காரோன்னோ அவரோட மச்சினன் நான்”
“ஓஹோ! அவரா! நன்னாத் தெரியுமே நேக்கு! பாவம் ரொம்ப நல்ல மனுஷன்! அதான் சீக்கிரம் போய்ச் சேர்ந்துட்டார். இந்த லோகத்துல நல்லவாளுக்கே காலம் இல்லன்னா!”
“ஆமா! ஆமா! சரியாச் சொன்னேள்! அப்புறம் என்ன விசேஷம்! கோயில்ல எல்லாம் பாதி புதுசா பெயிண்ட அடிச்ச மாதிரி இருக்கே! ஈரமே இன்னும் காயலையே!, அங்க அங்க குப்பைக் கூளம், மஞ்சள், கும்பம், சொம்பு, என்ன விசேஷம்?”
“ஆமா! அந்தக் கொடுமையை ஏன் சாமி கேக்கெறேள்! கிட்ட வாங்கோ! செத்தக் காதைக் கொடுங்கோ சொல்றேன்”
“------------”
“என்னது! அடக் கடவுளே! இதென்ன அக்கிரமமா இருக்கு, கேள்வி கேட்பாரே இல்லையா?”
“------------”
“யார் சுவாமின் கேட்கறது? அந்த பகவானே பார்த்துண்டு சும்மா தானே இருக்கான்”
“அப்படிச் சொல்லாதீங்கோ! நல்லது, பொல்லாது எல்லாத்துக்கும் கைமேல பலன்! நான் சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்கோ”
“ஓஹோ, நீர் சும்மா விட மாட்டீரா, நீர் என்ன பெரிய பிராக்கியனா? போங்காணும், அவனவன் அஸ்தில புடிச்சுண்டு உட்காந்திருக்கான், இதுல நீர் வேற வந்து வெறுப்பேத்தறேள்”
“இல்லங்காணும், பகவான் பாத்துண்டு சும்மா இருக்க மாட்டான். நிச்சயம் தட்டிக் கேப்பான்னு சொல்ல வந்தேன்”
“ஆமா! நீங்க தான் மெச்சிக்கனும்! இங்க ஒரு பய வாயைத் திறக்கறது இல்ல தெரியுமோ! எல்லாருக்கும் பயம். எல்லாத்துக்கும் பயம்”
“அப்படியா?”
“ஆமா, ஆமா! ஏதோ பாட்டு கூட அந்தக் காலத்துல வருமே! வாய்ச் சொல்லில் வீரரடின்னு அந்த மாதிரி எல்லாம் வேஸ்ட்”
“சரி! இன்னும் எவ்ளோ இடத்துல இந்த மாதிரி! உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி தப்புத் தப்பா யார் சொல்லித் தறா ?”
“அதெல்லாம் எங்கிட்ட எதுவும் கேட்காதீங்கோ சுவாமின்! , நேக்கு எதுவும் தெரியாது. 108ன்னு கேள்வி, அதுவும் அடுத்த தமிழ் வருஷப் பிறப்புக்குள்ளயாம்”
“நடக்கட்டும்! நடக்கட்டும்! அப்புறம் அவா அவா பாடு”
“ஆமா நடை சாத்தலயா?”
“இதோ ஆச்சு, உச்சிக் காலம் ஆனதும் விநியோகம், அது முடிஞ்சவுடனே நடை அடைச்சுட்டுக் கிளம்ப வேண்டியது தான்”
“பிரசாதமா!” என்றார் கடவுள் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு.
“பிரசாதம் மாதிரி தான், ஆனா பிரசாதம் இல்லை, உங்களுக்கு வேணும்னா நீங்க அந்தக் கியூல போய் நின்னுண்டேள்னா கிடைக்கும்”
“சரி!சரி! நான் பார்த்துக்கறேன், நீர் உம்ம வேலையைக் கவனியும்” சொல்லி விட்டுக் கடவுள் பெரிய கியூவில், நடுவில் போய் நின்று கொண்டார்.
“யோவ், பாத்தா பெர்ய மன்சனாட்டம் கீறே, தபா, ஷோக்கா உள்ளார பூர்றியே நைனா, இன்னா, நாங்கள்லாம் நிக்கறது தெர்ல!” என்றான் கூட்டத்தில் ஒருவன்.
“என்ன சொல்ற நீ நேக்கு எதுவும் புரியலையே”
“ஆங்! எதுவும் புரியாமத் தான் சைடுல வார்ரீயா நைனா, போ, போ, அந்தாண்ட, கடைசில போய் நின்னுக்கோ, முன்சாமி அண்ணாத்தேக்கு வழி விடு”
கடவுள் தள்ளாத குறையாகத் தள்ளப்பட்டுக் கடைசியில் போய் நின்றார்.
சற்று நேரம் சென்றது.
“அடக் கடவுளே! என்னன்னா இது?” கணபதி சுப்ரமண்ய அய்யர் கவலையுடன் அருகில் வந்தார்.
“பரவால்லை, ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் கடைசியாவே நின்னுக்கறேன்” கடவுள் சோகமான குரலில் சொன்னார்.
“சரி நீங்க என்னோட வாங்கோ”
“அம்பி, டேய் அம்பி,” என அய்யர் குரல் கொடுக்க வேஷ்டி, துண்டு மட்டும் அணிந்து குடுமியில்லாத ஒரு வாலிபன், அருகில் வந்து “என்னப்பா?” என்றான்.
“இவர் நமக்குத் தெரிஞ்சவர், ஆத்துக்கு அழைச்சுண்டு போய் இலையைப் போடு, நான் செத்த நேரத்துல, நடையைச் சாத்திட்டு வரேன்”
“சரிப்பா” பையன் கடவுளுடன் புறப்பட்டான்.
மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்த கடவுள், சற்று பவ்யத்துடன், “அம்பி, செத்த மெதுவாப் போ, நேக்கு வண்டியில எல்லாம் போய்ப் பழக்கம் இல்லை” என்றார்.
“சைக்கிள்ல கூடவா போனதில்லை”, என்றான் அம்பி ஆச்சர்யத்துடன்.
“ஆமா, ஆமா”
“அப்புறம் எப்படி, வெளில எங்கேயாவது போகணும்னா என்ன பண்ணுவேள்?, நடந்தேவா போவேள்?”
“இல்லை, இல்லை, எல்லாம் நந்தி தான், வாகனம் தான்”
“என்னது உளர்றேள்! நந்தி, வாகனம்னுண்டு”
“இல்ல, இல்லை, நடை தான், வாகனம் தாங்கிறதைத் தப்பாச் சொல்லிட்டேன்”
“சரி சரி, ஆம் வந்தாச்சு இறங்குங்கோ”
“ஆஹா, பேஷா, ஆமா, நீ என்ன கோவில்ல தான் இருக்கியா?”
“கோவில்ல சுவாமிதான இருக்கும்!, நீங்க என்ன கேட்க வர்றேள்னு நேக்குப் புரியலையே! அம்மா, அம்மா,..”
” என்னாடா?”
” இவர் அப்பாக்குத் தெரிஞ்சவராம், இலையைப் போடச் சொன்னார், செத்த நாழில வரேன்னார்”
“சரி சரி! வாங்கோ மாமா, உள்ற வாங்கோ, பாத்து, தலையைக் குனிஞ்சு வாங்கோ, நிலை இடிச்சுடப் போறது”
“ம், ம்ம், சொந்த ஆமா, ரொம்பச் சின்னதா இருக்கே!” என்றார் கடவுள்.
“சொந்தமா, எங்களுக்கு ஏது சொந்தம், எல்லாம் வாடகை தான்! நீங்க உட்காருங்கோ, தீர்த்தம் சாப்பிடறேளா!”
“ஆஹா, பேஷா”
“என்னது தண்ணி கசக்கற மாதிரி இருக்கே”
“இது பரவால்லை, சில சமயம் உப்பு வேற கரிக்கும், வாய் எல்லாம் புண்ணாப் போய் எரியும். சில சமயம் சாக்கடைத் தண்ணி எல்லாம் கலந்து வேற வரும். என்ன பண்றது தலை எழுத்து, குடிச்சு தானே தீரணும். காலம் காலமா இதைத் தான் சாப்பிட்டுண்டு வரோம் நாங்க, ஆமா, நீங்க என்ன மெட்ராசுக்குப் புதுசா?”
“ஆமா, ஆமா, நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருந்தாரோன்னோ, அவரோட சொந்த மச்சினன் நான், ஆமா, நீங்க எப்படிக் கண்டு பிடிச்சேள் நான் மெட்ராசுக்குப் புதுசுன்னு?”
“இல்லை, எல்லாத்தையும் ரொம்ப ஆச்சரியமாப் பார்க்கறேளே அதான் கேட்டேன்”
“ஆமா, ஆமா, ஹி..ஹி..” கடவுள் அசடு வழிந்தார்.
“அந்தக் காத்தாடியை வேணாப் போடட்டுமா, செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, அவர் வந்ததும் இலையைப் போட்டுடலாம், சரியா,”
“ஆஹா”
கடவுள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, நவீன காற்றாடியின் குளுமையான காற்றில், சற்றே தன்னை மறந்தார்.
(தொடரும்)
இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த நண்பருக்கு நன்றி
1 comment:
நல்ல கதை
Post a Comment