முதல் பாகம் இங்கே....
இரண்டாம் பாகம் இங்கே....
“என்ன சுவாமி நல்ல தூக்கம் போல இருக்கே” சாஸ்திரியார் எழுப்பவும் கடவுள் எழுந்து கொண்டார்।
“ஆமாம்! ஆமாம்! உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டே”
“ஆமா, ஆமா, குண்டருக்கும் கூடத் தான் உண்டு। அடேய் அம்பி, போய் பாலை வாங்கிண்டு வா சீக்கிரம்!” சாஸ்திரியார் விரட்டினார்.
” என்னன்னா! உங்காத்துல மாடு, கன்னு எல்லாம் இல்லயா, பாலைப் போய் வெளில எங்கேயோ வாங்கிண்டு வரச் சொல்றேளே” என்றார் கடவுள் ஆச்சரியத்துடன்।
” நான் தான் மாடு!, இதோ இந்த அம்பி தான் கன்னுக் குட்டி, நீங்க வேற செத்த சும்மா இருக்கேளா, காலம் இருக்கற இருப்புல!. ஆமா, மெட்ராஸ் என்ன உங்க ஊர்னு நினைச்சேளோ. மாடு, கன்னுன்னு இஷ்டம் போல இருக்கறத்துக்கு, இது மாநிலத் தலைநகர் சுவாமி, மாநிலத் தலைநகர்!”
“என்ன நகரோ, ஆனா நான் பார்க்கறவரைக்கும் எதுவுமே சரியில்லையே, வழியெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு। எங்கே பார்த்தாலும் ஒரே சாக்கடை. குப்பை, கூளம். கோயில் கிட்டயே, கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாம அசிங்கம் பண்ணி வச்சிருக்காளே! கிராமமே தேவலாம் போல இருக்கே!
“ஏன் சுவாமின் , உங்க கண்ணுல நல்லதே படாதோ, எப்போ பார்த்தாலும் தீவீர சிந்தனையா இருக்கேளே!”
“ஆமா, ஆமா... இல்லை, இல்லை,... குரங்கு கைப் பூமாலையாப் போய்டுத்து இந்த பூமி, அதான்!”
“ஆமாமா அச்சரிதான்! அத்தை விடுங்கோன்னா, நீங்க எங்கே போகனும்னு சொன்னால் பையன் கொண்டு போய் விட்டுடுவான்। காபி சாப்பிட்டவுடனே கிளம்பத் தோதா இருக்கும்”
“நான் வந்து... இங்க ஏதோ பாற்கடல் இருக்காமே, அதைத் தான் பார்க்கனும்னு ஆசையா இருக்கு”
“ஓகோ! நீங்க பீச்சைத் தான் சொல்றேள்னு நினைக்கிறேன்। அது பாற்கடல் இல்லை சுவாமி, நாற்கடல், ஒரு பெரிய சாக்கடையே அதுல கலக்கறது தெரியுமோன்னோ”
“அது என்னவோன்னா, ஒரு தடவை பார்த்துட்டேன்னா, நன்னா இருக்கும்”
“ஆகா, பேஷா, அம்பி இவரைக் காப்பி சாப்பிட்டதும், அங்க கூட்டிக் கொண்டு போய் விடு। இல்லை பஸ்ல ஏத்தி விட்டாலும் சரி”
“சரிப்பா”
காபி ஆனதும் கடவுளிடமிருந்து ஒரு ஏப்பம் வெளிப்பட்டது। கடவுள் மனதிற்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது.
“சரின்னா, நான் கிளம்பறேன், ஏதோ உங்களை மாதிரி உள்ளவாலாள தான் நாட்டுல மழையே பெய்றது, ஏதோ என்னாலான உதவி, மறுக்காம வாங்கிக்கணும்” சொன்ன கடவுள் கையைத் திறக்க அதில் ஒரு நெல்லிக்காயளவு தங்க உருண்டை இருந்தது।
“அய்யய்யோ, இது ஏதுடா வம்பா இருக்கு, நான் என்ன பண்ணிட்டேன்னு எனக்கு இதைத் தர வரேள்। எனக்கு எதுவும் வேண்டாம்னா” மறுத்தார் சாஸ்திரியார்.
“சும்மா வாங்கிக்குங்கோ, கடவுள் கொடுக்கற மாதிரின்னு வச்சுக்கங்களேன்।”
“வேண்டவே வேண்டாம்னா। அப்புறம் யாராவது பார்த்துட்டு, கோயில் நகையை உருக்கி தங்கமா வச்சிருக்கான் அப்படிம்பா, இந்தக் கால் வயத்துக் கஞ்சியை மானத்தோட குடிக்கிறேனே அது போதும் நேக்கு, அந்த பகவான் ஒரு போதும் எங்களைக் கைவிட மாட்டான்.”
“ஆமா, நிச்சயமாக் கைவிட மாட்டான், நானும் கைவிட மாட்டேன்। கவலைப் படாம இருங்கோ. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” நெகிழ்ச்சியுடன் சொன்ன கடவுளுக்குக் கண்கள் கலங்கி விட்டன. ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த திருப்தி அவர் மனதில் நிலவியது.
அனைவரிடமும் விடை பெற்ற கடவுள், மோட்டார் சைக்கிளில் உட்கார அம்பி, இப்போது பேண்ட், ஷர்டுக்கு மாறி, வேகமாக கடற்கரையை நோக்கி வண்டியைச் செலுத்தத் தொடங்கினான்।
(தொடரும்)
இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த நண்பருக்கு நன்றி
No comments:
Post a Comment