Monday, September 14, 2009

ஒரு (கெட்ட) வார்த்தைக் கதை

ராமு நல்ல பையன். கெட்டிக்காரன். ஆனால் போக்கிரி. யாருக்கும் அடங்கமாட்டான். அவனால், அவன் இருந்த கிராமத்தில் அடிக்கடி ஏதாவது பிரச்னை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் அவன் பெற்றோர் அவனை சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைக்கத் தீர்மானித்தனர். சென்னையில் ராமுவின் மாமா வசித்து வந்தார். திருவல்லிக்கேணியில் அவர் வீடு இருந்தது. அருகில் உள்ள பள்ளியில் அவர் பியூனாக வேலை பார்த்து வந்தார். எனவே ராமுவின் பெற்றோர், ஒரு சுபயோக சுபதினத்தில், அவனை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவன் மாமா வேலை பார்க்கும் பள்ளியிலேயே அவனையும் சேர்த்து விட்டனர். அவனும் நன்கு படிக்க ஆரம்பித்தான் .மாதங்கள் உருண்டோடின. நகரப் பழக்க வழக்கங்கள் மெல்ல அவன் மீது படிய ஆரம்பித்தன. பட்டணத்தின் மீது உள்ள பிரமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, நாளடைவில், அவனும் ஒரு நகரவாசியாகி விட்டான்.

ஆனால் ஒரு பிரச்னை. ராமு எப்பொழுது பேசினாலும், சென்னைக்கே உரித்தான ஒரு (கெட்ட) வார்த்தையை உதிர்த்துவிட்டுத் தான் மற்ற வார்த்தைகள் பேசுவான். அந்த அளவிற்கு அவன் நகரவாசியாகி விட்டான். அந்த வார்த்தை, அதன் வீரியத்தன்மையையும், அர்த்தத்தையும் இழந்து பல வருடங்களாகின்றன என்றாலும், சிறுவனாகிய அவன் அதை எப்பொழுதும் உச்சரிப்பது பள்ளியில் பிரச்னையாகிவிட்டது.

ஆசிரியர் பலமுறை எச்சரித்தும், அவன் மாமா அவனைப் பலமுறை கண்டித்தும் ஒரு பயனும் இல்லை. அவன் வாயிலிருந்து அவன் அறிந்தோ, அறியாமலோ '...........' எனத் தொடங்கும் அந்த வார்த்தை வந்து கொண்டுதான் இருந்தது.

'........... சூப்பர் சினிமாடா..'
'........... சூப்பர் பாட்டுடா...'
'........... பீச்சுக்குப் போலாமா'
'........... என்ன டிபன் இன்னிக்கு..'

இப்படி, வீட்டிலும், வெளியிலும் என்று அவன் 'திருவாய்மொழி' தொடர, அவனே அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவனால் மற்ற பள்ளிப் பிள்ளைகளும் கெட்டுப் போகிறார்கள் என்ற புகாரினால், அவன் பள்ளியை விட்டே நிற்கும் சூழ்நிலை உருவானது.

ஒரு நல்ல நாளில் ராமு மீண்டும் தனது ஊருக்கே திரும்பினான். அவன் பெற்றோருக்கு மிகவும் வருத்தம் தான். ஆனால் அங்கு போயும் அவன் திருந்தவில்லை. அந்த வார்த்தை அவன் வாயிலிருந்து வந்து கொண்டுதான் இருந்தது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முதலில் அந்த வார்த்தை புரியாததாலும், அதன் அர்த்தம் சரியாகத் தெரியாததாலும் ஆரம்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. நாளடைவில் அவன் வயதொத்த மற்ற சிலரும் அந்த வார்த்தையை உச்சரிக்கத் தொடங்க, பின்னர் அதன் அர்த்தம் தெரிய வந்தததும், ராமுவை கண்டிக்க ஆரம்பித்தனர். ராமுவின் பெற்றோரிடமும் புகார் செய்தனர்.

ராமுவின் பெற்றோருக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று. வேறு வழியில்லாமல், அருகில் உள்ள கோயிலில், ஆலய உதவியாளனாய் அவனைச் சேர்த்து விட்டனர். இந்த மாதிரி, கோயில், மந்திரம், சாமி என்றாலாவது பையன் திருந்துவான் என்பது அவர்கள் நம்பிக்கை. பூசாரிக்கு உதவுவது, மணியடிப்பது, தரிசனம் செய்ய வருபவரை, லைனில் வருமாறு ஒழுங்குபடுத்துவது, பிரசாதம் தருவது என்பன அவன் வேலைகள்.

அவனும் மிகுந்த கட்டுப்பாடோடு தான் நடந்து கொண்டான். ஆயினும் என்ன? வழக்கம் போல் அவனையும் மீறி அந்த வார்த்தை வரத்தான் செய்தது.

அதுவும்...
'........... லைன்ல வா'
'........... சத்தம் போடாதே'
'........... அர்ச்சனையா பண்ணனும்'
'........... இந்தா பிரசாதம்'

...என்றெல்லாம் அவன் வாயிலிருந்து வெளிவந்ததும், அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை நையப் புடைக்க ஆரம்பித்தனர். அந்த வேலையையும் அவன் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இறுதியில் அவன் பெற்றோரின் முயற்சியால் அது தடுக்கப்பட்டது. அவன் பெற்றோர்கள் ஆலய இறைவனை மனமுருக வேண்டினர். தங்கள் மகனைத் திருத்துமாறு மனமுருகப் பிரார்த்தித்தனர்.

இறைவனும் திருவுளம் இறங்கினான். அவர்கள் கனவில் தோன்றி "நாளை எல்லாப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும்" என்று திருவாய் மலர்ந்தருளினான்.

மறுநாள் பொழுது விடிந்தது. ராமு வழக்கம் போல ஆலயத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் வந்து பிரசாதம் கேட்கவும், எடுத்துக் கொடுக்க முற்பட்டான். அவனையும் அறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது. "........... பிரசாதம்.."

அவ்வளவுதான் கடவுளுக்கு அளவற்ற சினம் ஏற்பட்டது. ' தன்னுடைய சன்னதியிலேயே, இவ்வாறு வரைமுறை இல்லாமல் இவன் நடக்கக் காரணம், வாயைத் திறந்து பேசுவதனால் தானே, நாவு என்ற ஒன்று இருப்பதால் தானே, இவனை முழுக்க ஊமையாக்கி விட்டால்...' நினைத்த கடவுள் தனது குண்டாந்தடியை கடும் சீற்றத்துடன் அவன் கழுத்தை நோக்கி எறிந்தார்.

அந்த நேரம் பார்த்து அவன் கையில் வைத்திருந்த எலுமிச்சம்பழம் கீழே விழ, அதை அவன் எடுக்கக் குனிந்தான்.

இறைவனின் குறி தவறியது. குண்டாந்தடி வெறும் சுவற்றின் மீது மோதிக் கீழே விழுந்தது.


கடவுள் சொன்னார்:

"'........... ஜஸ்ட் மிஸ்..."

*************************************************************************************

நீதி: கடவுளே ஆனாலும், பழக்க வழக்கங்களின் பாதிப்பிலிருந்து ஒருவர் தப்பிவிட இயலாது.

*************************************************************************************

Saturday, September 12, 2009

அம்பியின் அனுபவங்கள்- இறுதிப்பகுதி

முதல் பகுதி இங்கே...


இரண்டாம் பகுதி இங்கே...


“ஒண்ணும் இல்லை. நம்ம ஃப்ரெண்ட்.” என்றார்.

நான் அதைக் கவனிக்காமல் “சரி! சார், நம்ம விஷயம் என்னாச்சு, எவ்வளவு செலவாகும்?” என்றேன்

“ம்! ஹோமத்திற்கு ஒரு ஐயாயிரம் ஆகும். அப்புறம் இராமேசுவரம், திருச்செந்தூர், தனுஷ்கோடில போய்ப் பரிகாரம் ஒண்ணு பண்ணனும். உங்களால முடிஞ்சா நீங்க நேரே போய் பண்ணலாம். முடியாத பட்சத்துல பணத்தை எங்ககிட்ட கொடுத்திடுங்கோ. உங்க சார்புல நாங்க பண்ணிடுவோம். அததுக்கு ஆள் இருக்கா என் கிட்ட. என்ன அதுக்கு ஒரு பத்தாயிரம் கிட்ட ஆகும். அப்புறம் முக்கியமா மோதிரம் ஒண்ணு. தங்கத்துல குரு விரல்ல, அதாவது வலது கை ஆள்காட்டிவிரல்ல, கனக புஷ்பராகம் கல் வைச்சுப் போடணும். அப்புறம் மோதிர விரல்ல வெள்ளில, முத்து பதிச்சு ஒரு மோதிரம் போடணும். அவ்வளவு தான் உங்க பிராப்ளம் எல்லாம் சால்வ்டு. கடைசியா, சாமியாரைப் பார்க்கறதும் பார்க்காததும் உங்க இஷ்டம்.”

“என்ன! எல்லாம் சேர்த்தா ஒரு முப்பது, நாப்பது ஆயிடும் போல இருக்கே!” என்றேன்.

“அவ்வளவு ஒண்ணும் ஆகாது சுவாமி! நா என்னால முடிஞ்சவரிக்கும், சல்லிசா முடிக்கப் பார்க்கறேன், யூ டோண்ட் வொர்ரி” என்றார்.

“சரி சார், மோதிரம், என் பிரண்டோட அங்கிள் கடைல வாங்கிக்கலாம், ஒண்ணும் பிரச்னை இல்ல, மெதுவாக் காசு கொடுத்தாப் போதும்.”

“சார்! கண்ட இடத்துல வாங்காதீங்கோ! நான் சொல்ற இடத்துல வாங்கினீங்கன்னா, விலையும் சல்லிசு, நம்பகமாகவும் இருக்கும். இல்லன்னா அப்புறம் யாராவது, கண்டத, டூப்ளீகேட்டக் கொடுத்து ஏமாத்திடுவா உங்களை!”

“இல்லை சார்! இதுல ஏமாறதுக்கு இடமே இல்லை. என் பிரண்டோட அங்கிள் ரொம்ப வருஷமா இந்த பிசினசு தான் பண்றார். ரொம்ப நம்பகமானவர். நாணயமானவர்”

“எல்லாம் சரி தான் சுவாமின்! கல் எல்லாம் நல்லதா இருக்கனுமில்லையா, நான் சொல்றவா, பூஜை எல்லாம் பண்ணி, அதுக்கு நல்ல பவர் ஏத்தி வச்சிருக்கா, போட்டுண்டேள்னா காரியம் உடனே நடக்கும்”

“பராவாயில்லை சார்! நான் என் பிரண்டோட அங்கிள் கடையிலயே வாங்கிக்கறேன். அவரும் அந்த மாதிரி பூஜை எல்லாம் பண்ணி தான் விக்கிறார்”

“அப்புறம் உங்க இஷ்டம் சுவாமின்! நான் சொல்றதைச் சொல்லிட்டேன், ஏதாவது, எங்கேயாவது வாங்கிப் போட்டு விபரீதமா ஏதாவது நடந்தா நான் பொறுப்பு இல்லை. என்னைக் குறை சொல்லக் கூடாது ஆமா!”

“என்ன சார் பயமுறுத்தறீங்க”

“நான் சொல்றதைச் சொல்லிட்டேன். நான் ஒண்ணும் பயமுறுத்தலை. இப்படித்தான் நமக்குத் தெரிஞ்ச பையன் சொல்லச் சொல்லக் கேட்காம வேற இடத்துல வாங்கிப் போட்டுண்டான். என்ன ஆச்சு? . தோஷம் கழிக்காத கல். அடுத்த மாதத்துலயே வண்டி ஆக்சிடெண்டாகி, கால் ஒடிஞ்சு இப்போ ஆசுபத்திரில இருக்கான். எல்லாம் அவா அவா விதி, நாம என்ன செய்ய முடியும்?”

“சரி சார்! அந்த ஜூவல்லரி பேரென்ன?”

ஜூவல்லரி பெயரை சொன்னார்.

முன்பு போன் வந்த போது கிசு கிசுக் குரலில் பேசிய அதே ஜூவல்லரி.

எனக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

“ஓகோ! இப்படித்தான் நீங்க ஊர ஏமாத்தறீங்களா?” என்றேன்.

“என்னது நான் ஊர ஏமாத்துறேனா? அய்யோ, என்ன சொல்றே நீ! வைதேகி! வைதேகி” கத்த ஆரம்பித்தார். கண்கள் சிவந்து விட, கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன அவருக்கு.

அதற்குள் ‘வைதேகி’ என அழைக்கப்பட்ட பெண்மணியும், மற்றும் ஒரு திடகாத்திரமான ஆணும் அங்கே வந்து விட, எனக்கு இப்பொழுது உதறல் எடுத்தது.

“என்ன! என்ன!” என்றனர் இருவரும். அதுவும் அந்த திடகாத்திரமான ஆள் வேக வேகமாக என்னை நெருங்கினான்.

எனக்கு உடல் வியர்த்தது. நாக்கு குழறியது. “அது வந்து…. அது வந்து… நான் போயிட்டு அப்புறம் வரேன்.” பதிலைக் கூட எதிர்பார்க்காமல், தேவராஜனுக்கான ஃபீஸ் நூறு ரூபாயை, மேசை மீது வைத்து விட்டு வேகமாக வெளியே வந்தேன் கோழை போல.

தேவராஜன் முதுகிற்குப் பின்னால் என்னை முறைத்துப் பார்ப்பதையும், ஏதேதோ சொல்லித் திட்டுவதையும், நன்கு உணர முடிந்தது. வேகவேகமாய் பஸ் ஸ்டாண்ட் வந்து, பஸ்ஸில் ஏறிய பின்பு தான் எனக்கு உயிர்வந்தது.

நான் செய்தது சரியா, தவறா இன்னமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அனுமானித்தது இது தான். — இது போன்று ஜோதிடம், ஜாதகம் பார்ப்பவர்களில் பலர், அது பற்றிய முழு அறிவு பெற்றவர்களல்ல. அந்தத் தொன்மையான சாஸ்திரம் பற்றி முழுமையாக அறிந்தவர்களும் அல்ல. எல்லாம் அரைகுறைதான். அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே. இவர்கள் சைக்காலஜியையும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். அதைக் கொண்டு, தன்னிடம் வருபவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்தப் போலி ஜோதிடர்களிடம், யாராவது ஜோதிடம் பார்க்க வந்தால், அவர்களைப் பற்றி, அவர்களுக்கே தெரியாமல் பேசி அறிந்து, அவர்களிடமே அதைத் திருப்பிக் கூறுகின்றனர். வந்திருப்பவர்களும், இதனை உணராமல் ஆகா, ஒகோ எனப் புகழ ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு புகழ்பவர்கள், தங்களுக்குத் தெரிந்தவரிடத்தில், நண்பரிடத்தில் இது போன்ற ஜோதிடர்களைப் பற்றிக் கூற அவர்களும், இவர்களை நாடி வருகின்றனர். ஏமாறுகின்றனர்.

அதே சமயம், ஒரு சில உண்மையான ஜோதிடர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் நோக்கம் பணம், புகழ் சம்பாதிப்பதல்ல. நாடி வருபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுவது. நெறிப்படுத்துவது தான். பரிகாரம், ஹோமம், மோதிரம் என்று தவறான வழியை இவர்கள் காட்ட மாட்டார்கள். ஆலய தரிசனம், அர்ச்சனை, தீபமேற்றுதல் போன்ற எளிய பரிகாரங்கள் தான் இவர்கள் கூறுவது. ஆனால் இவர்களைப் போன்றவர்களுக்கு செல்வாக்குக் கிடையாது. மக்கள் ஆடம்பரமாக உலா வரும் போலிகளைக் கண்டே ஏமாறுகின்றனர். அப்புறம் பொய், பித்தலாட்டம் என புலம்புகின்றனர்.

என்னைப் பற்றி சோதிடர் கூறியதும் ஒரு வித உளவியல் அனுமானத்தினால் இருக்கலாம். நான் நடந்து வந்ததைப் பார்த்து, என்னிடம் வண்டி இல்லை என முடிவு கட்டியிருக்கலாம். வேலையில் பிரச்னை எனக் கூறியதில் இருந்து, நண்பன், துரோகம் என மேற் கொண்டு சிலவற்றைக் கூறியிருக்கலாம். திருமணம் ஆகவில்லை என்பதை அறிந்து, காதல், ஆசை எனப் பலவற்றிக் கூறியிருக்கலாம். அவை எல்லோருக்கும், எக்காலத்தும் பொருந்தக் கூடியது தானே!.

இது போன்றே எனக்கு முன்னால் பார்த்த மாமிக்கும் கூறியிருக்கலாம். “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்ற பழமொழியைப் போல சிலவற்றை அனுமானித்துக் கூற, அவை சரியாக இருந்திருக்கலாம். மாமியும் ஏமாந்து இருக்கலாம்.

ஆகவே, அன்பர்களே, இந்த சாமியார், ஜோதிடம், வாஸ்து என்று நேரத்தைச் செலவிடுவதற்கு பதில், நம்மையே நாம் நம்ப வேண்டும். அல்லது அனுபவம் வாய்ந்த பெரியோர்களை ஆலோசனை கேட்டு நடந்தால், வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளித்து விடலாம். அதனால் தான் வள்ளுவரும், ‘பெரியாரைத் துணை கோடல்’ என ஒரு அதிகாரம் இயற்றியிருக்கிறார்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

அன்புடன்
அம்பி

Friday, September 4, 2009

அம்பியின் அனுபவங்கள் -- 2

இந்தக் கதையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த நண்பருக்கு நன்றி!


********


முதல் பகுதி இங்கே ....

நான் உள்ளே அழைக்கப்பட்டேன்।

“வாங்கோ! சாரி! செத்த லேட்டாயிடுத்து!” என்றார் தேவராஜன்।

“அதனாலென்ன சார்! பரவாயில்லை! ரொம்ப சிம்பிளாயிருக்கீங்களே! நான், மத்த ஜோதிடர் மாதிரி, அசிஸ்டெண்ட், ஆபிஸ், செல்போன் எல்லாம் இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன்” என்றேன்.

“நீங்க நினைகிறதில ஒண்ணும் தப்பே இல்லை! இன்னும் சித்த நாள் போனவுடனே நானே ஒரு ஆபிஸ் ஓப்பன் பண்ணலாம்னு தான் இருக்கேன்। பார்க்கலாம்। ஆமா உங்க ஜாதகத்தைக் கொண்டாங்கோ.”

“இந்தாங்க சார்! நீங்க தான் பார்த்துச் சொல்லனும், எங்க போனாலும் ஒரே பிரச்னை. சாண் ஏறினா… முழம் சறுக்கினாப் பரவாயில்லை. இங்கே அடி சறுக்கறது. ஏன்னு தான் தெரியலை. நீங்க தான் கொஞ்சம் சரி பண்ணனும். வேலை, உத்யோகம், கல்யாணம்னு எதுவும் இன்னும் சரியா அமையலை”

“கவலைப்படாதீங்கோ, எல்லாம் நான் பார்த்துக்கறேன், ஆகா, பத்தாமிடத்துல சனி, செவ்வாய் சேர்க்கை, உங்களுக்கு உத்யோகத்துல நிறையப் பிரச்னை இருக்குமே”

“ஆமாம் சார்”

“சரியா சொன்னேனா, இன்னும் கேளுங்கோ, கூட இருக்கறவனே, குழி பறிப்பான், நண்பன் மாதிரிப் பழகிட்டு முதுகில குத்துவான், போட்டுக் குடுப்பான், யாரை நம்பறது, யாரைப் பகைச்சுக்கறது ஒண்ணுமே உங்களுக்குத் தெரியாது சரியா?”

“கரெக்ட் சார்! எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க?”

“எல்லாம் ஜாதகம் சொல்றதே சார்! இன்னும் கேளுங்கோ, உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, காதல் திருமணம் பண்ணிக்க ஆசை, ஆனா முடியலை, சரியா, அப்புறம் எல்லார் மாதிரியும் ஒரு வண்டி வாங்கனும்னு ஆசை, ஆனா பொருளாதரம் உதவி இல்லை. குடும்பத்திலயும் சரியான உதவி இல்லை. சரியா?”

“அய்யோ, சார்! எப்படி சார், எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே, எப்படி இது?. என்னால நம்பவே முடியலையே” என்றேன் பதட்டத்துடன்.

ஒருவேளை ஏதாவது இஷிணி மாதிரி தேவதை வந்து என்னைப் பற்றி இவர் காதில் சொல்கிறதா என்ன!, எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறார்! என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

” ம்! ஆச்சா! ம்! ஒண்ணும் பிராப்ளம் இல்ல. ஈசியாச் சரி பண்ணிடலாம், சின்னதா ஒரு நவக்ரஹ சாந்தி ஹோமம் பண்ணனும். அப்புறம் சில பரிகாரங்கள் கோயில்ல போய் பண்ணனும். பண்ணினா எல்லாப் பிரச்னையும் சரியாப் போயிடும்.”

“நிஜமாச் சரியாப் போயிடுமா சார்!”

“அந்தச் சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். நிச்சயமா சரியாப் போயிடும். அப்புறம் நான் ஒரு யந்திரம் எழுதித் தரேன். அதை வீட்டுல வச்சு பூஜை பண்ணுங்கோ, கல் வச்ச மோதிரம் ஒண்ணும் போடணும். அதையும் போட்டா எல்லாம் சரியாப் போயிடும். அப்புறம் நீங்களே நினைச்சாலும் உங்களாலே கீழே வர முடியாது. அவ்வளவு உசரத்துக்குப் போயிடுவேள்”

“நிஜமாவா சார்?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“ஆமாம். நிச்சயமான்னா... எங்க உங்க கையக் காட்டுங்கோ.ஆஹா... ம்! சுக்ர மேடு ரொம்ப ஸ்டாராங்கா இருக்கு, ம் யோகம் தான், அய்யா, மன்மதராசா போல இருக்கே”

“ம்ஹூம், ம்...ம்ம்ம், ஹி, ஹி ஆமா” என்று உளறிக் கொட்டினேன்.

“சரி! சரி! ஒரு சித்து வேலை பண்ணப் போறேன்! திருவண்ணாமலை போயிருந்தப்போ அங்கே ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்தது. ஆஹா! சித்தர்கள் எல்லாம் என்னமா பறந்து பறந்து போறா தெரியுமா?”

“நிஜமாவா சார்! நீங்க பார்த்தீங்களா!”

“ஆமா, இல்லியா பின்னே, காத்து வேகம்பாலே அது மாதிரி பறந்து பறந்து அப்பா! புல்லரிக்கிறது நேக்கு!”

“அய்யோ! நீங்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கனும் சார், சித்தர்களையே நேர்ல பார்த்தேன்னு சொல்றீங்களே, ஆமா என்ன சித்து வேலை பண்ணப் போறீங்க?, வாய்க்குள்ள இருந்து லிங்கம் ஏதாவது எடுக்கப் போறீங்களா?. இல்லை செயின் மாதிரி ஏதாவது காத்துல இருந்து வரவழைக்கப் போறீங்களா?”

“ம்ஹூம்! அதெல்லாம் இல்லை, உங்க கையை நீட்டுங்கோ சொல்றேன்”

கையை நீட்டினேன்.

“ம்! இந்த விபூதி சித்தர் விபூதி! என்ன வாசனை வருதுன்னு பார்த்துட்டுச் சொல்லுங்கோ!”

“விபூதி வாசனை தான் வருது”

“அப்படியா, ம்! ம்! இப்போ பாருங்கோ”

ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தவாறே என் கையில் விபூதியைக் கொட்டினார்.

முகர்ந்து பார்த்தேன்

“இப்பவும் அந்த வாசனை தான் வருது சார்”

“நன்னாப் பாருங்கோ சார்! மனோரஞ்சிதம் வாசனை வரலை”

“இல்லையே” என்றேன் சற்றுக் கவலையுடன். இங்கே சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், இந்த மனோரஞ்சிதம் எப்படி இருக்கும், அதன் வாசனை எப்படிப்பட்டது என்றெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அவர் கொடுத்த விபூதியில் முன்பு என்ன வாசனை வந்ததோ அது தான் இப்பவும் வந்தது. அது மட்டும் சர்வ நிச்சயம்.

“இப்போப் பாருங்கோ” என்றார் தேவர். முன்பை விடச் சற்று அதிகமாக மந்திரத்தை முணுமுணுத்துவிட்டு, அதிகமான விபூதியைக் கையில் கொட்டினார்.

நான் முகர்ந்து பார்த்து விட்டு விழித்தேன்.

“மல்லிப் பூ வாசனை வரலை” என்றார்.

மீண்டும் முகர்ந்து பார்த்தேன். மல்லிப் பூ வாசனை வருகிற மாதிரித் தான் இருந்தது ஒரு வேளை பிரமையோ? ஒன்றும் புரியாமல் சந்தேகப்பட்டு மறுபடியும் நன்கு முகர்ந்து பார்த்ததில், பழைய விபூதி வாசனைதான் அடித்தது.

“இல்லையே சார்! விபூதி வாசனை தான் வரது” என்றேன்.

“போச்சு போங்கோ! சரி இப்போப் பாருங்கோ நிச்சயம் வேற ஏதாவது வாசனை வரும் குறிப்பா ரோஜாப் பூ வாசனை கண்டிப்பா வரணும்.”

என்னென்னெவோ மாஜிக் மாதிரி விரல்களை ஆட்டி விபூதியைக் கையில் கொட்டினார். மறுபடியும் முகர்ந்து பார்த்தேன். மூக்குப் பொடி வாடையும், வெற்றிலைப் புகையிலை வாடையும் சற்றே கலந்து அடித்த மாதிரி இருந்தது. தேவர் மூக்கிலும், வாயிலும் அவை குடியேறி இருந்ததனாலோ என்னவோ! மற்றபடி பழைய விபூதி வாடைதான். அதிலும் கூட முன்னைப் போல வாசனை இல்லை. வெகு நேரம் விபூதியைக் கையிலேயே வைத்திருந்தால் வாசனை போய் விடாதா என்ன! தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன்.

“என்ன ஆச்சு? இப்பொ தெரியறதா?” என்றார் தேவர்

“இல்லை! ஒண்ணும் இல்லை! எனக்கு ஒரு வாசனையும் அடிக்கலை. சொல்லப் போனா, முன்னை விட விபூதி வாசனை கூடக் குறைஞ்ச மாதிரி இருக்கு!”

“அப்படியா! அப்போ உங்களுக்கு ஏதோ கோளாறு இருக்கு, எல்லாருக்கும் நடக்கிறது உங்களுக்கு நடக்கலைன்னா, என்னத்தச் சொல்றது? ஏதாவது தோஷமா இருக்கலாம்! என்றார்.

“அய்யோ! என்ன சொல்றீங்க நீங்க” என்றேன் அதிர்ச்சியுடன்.

“ஆமா, எனக்கு என்னவோ சந்தேகமாத் தான் இருக்கு, இங்க சுங்குவார் சத்திரம் பக்கத்துல, ஒரு சாமியார் இருக்கார். வெத்திலைல மை தடவிப் பார்த்து எல்லாததையும் சொல்லி விடுவார். விருப்பம் இருந்தாப் போய் பாருங்கோ, முதல்ல நான் சொல்ற ஹோமம் எல்லாத்தையும் பண்ணிட்டு, நம்ம வேலையை முடிச்சுட்டுக் கடைசியா அங்க போலாம். நா வேணாலும் துணைக்கு வரேன்” என்றார்.

“சரி! சரி! எவ்வளவு செலவாகும்?”

“ம், பார்த்துச் சொல்றேன்”

அதற்குள் போன் வீரிட்டது. பக்கது அறைக்குள்ளே சென்று அதை அவசரமாக எடுத்து “ஹலோ” என்றார்.

“……………… ஜூவல்லரியா சொலுங்கோ என்ன விசேஷம்?.” உடனே குரலைத் தழைத்துக் கொண்டார்.

நான் அசுவாரசியமாய் வழக்கம் போலக் காதைக் கொடுத்தேன். கிசு கிசு குரலில், அவர் தணிவாகப் பேசினாலும் எனக்கு அவர் பேசுவதை நன்கு கவனிக்க முடிந்தது.

“…………………”

“அப்படியா வந்திருக்காளா, எத்தனை பவுன்ல வாங்கப் போறா, ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்கோ மூணு பவுனுக்குக் குறைஞ்சு போட்டா பிரயோசனப் படாதுன்னு. நானும் இங்க ஏற்கனவே சொல்லிதான் அனுப்பி இருக்கேன். ஆமா, நல்ல கல்லாப் பார்த்துப் போடுங்கோ, முன்ன ஒரு தடவ பிரச்னை ஆன மாதிரி ஆக வேண்டாம். ஜாக்கிரதை. அப்புறம் போன தடவ மாதிரி லேட் பண்ணாம நம்ம அமௌண்ட சீக்கிரம் செட்டில் பண்ணிடுங்கோ. புரியறதா?!”

“…………………………”

“இல்ல வேண்டாம், செக் வேண்டாம் சுவாமி! நீங்க வழக்கம் போலக் கேஷாவே கொடுத்துடுங்கோ, செக்குன்னா நமக்குப் பல பிரச்னை”

“…………………………”

“சரி! பரவால்லை, கொஞ்சம் சீக்கிரம் பாருங்கோ, நான் அப்புறம் பேசறேன்!” போனை வைத்து விட்டு வெளிவந்தார்.

நான் எங்கோ கவனிப்பது போல பராக்குப் பார்த்தவாறு நின்றிருந்தேன்.



(தொடரும்)