Monday, September 14, 2009

ஒரு (கெட்ட) வார்த்தைக் கதை

ராமு நல்ல பையன். கெட்டிக்காரன். ஆனால் போக்கிரி. யாருக்கும் அடங்கமாட்டான். அவனால், அவன் இருந்த கிராமத்தில் அடிக்கடி ஏதாவது பிரச்னை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் அவன் பெற்றோர் அவனை சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைக்கத் தீர்மானித்தனர். சென்னையில் ராமுவின் மாமா வசித்து வந்தார். திருவல்லிக்கேணியில் அவர் வீடு இருந்தது. அருகில் உள்ள பள்ளியில் அவர் பியூனாக வேலை பார்த்து வந்தார். எனவே ராமுவின் பெற்றோர், ஒரு சுபயோக சுபதினத்தில், அவனை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவன் மாமா வேலை பார்க்கும் பள்ளியிலேயே அவனையும் சேர்த்து விட்டனர். அவனும் நன்கு படிக்க ஆரம்பித்தான் .மாதங்கள் உருண்டோடின. நகரப் பழக்க வழக்கங்கள் மெல்ல அவன் மீது படிய ஆரம்பித்தன. பட்டணத்தின் மீது உள்ள பிரமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, நாளடைவில், அவனும் ஒரு நகரவாசியாகி விட்டான்.

ஆனால் ஒரு பிரச்னை. ராமு எப்பொழுது பேசினாலும், சென்னைக்கே உரித்தான ஒரு (கெட்ட) வார்த்தையை உதிர்த்துவிட்டுத் தான் மற்ற வார்த்தைகள் பேசுவான். அந்த அளவிற்கு அவன் நகரவாசியாகி விட்டான். அந்த வார்த்தை, அதன் வீரியத்தன்மையையும், அர்த்தத்தையும் இழந்து பல வருடங்களாகின்றன என்றாலும், சிறுவனாகிய அவன் அதை எப்பொழுதும் உச்சரிப்பது பள்ளியில் பிரச்னையாகிவிட்டது.

ஆசிரியர் பலமுறை எச்சரித்தும், அவன் மாமா அவனைப் பலமுறை கண்டித்தும் ஒரு பயனும் இல்லை. அவன் வாயிலிருந்து அவன் அறிந்தோ, அறியாமலோ '...........' எனத் தொடங்கும் அந்த வார்த்தை வந்து கொண்டுதான் இருந்தது.

'........... சூப்பர் சினிமாடா..'
'........... சூப்பர் பாட்டுடா...'
'........... பீச்சுக்குப் போலாமா'
'........... என்ன டிபன் இன்னிக்கு..'

இப்படி, வீட்டிலும், வெளியிலும் என்று அவன் 'திருவாய்மொழி' தொடர, அவனே அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவனால் மற்ற பள்ளிப் பிள்ளைகளும் கெட்டுப் போகிறார்கள் என்ற புகாரினால், அவன் பள்ளியை விட்டே நிற்கும் சூழ்நிலை உருவானது.

ஒரு நல்ல நாளில் ராமு மீண்டும் தனது ஊருக்கே திரும்பினான். அவன் பெற்றோருக்கு மிகவும் வருத்தம் தான். ஆனால் அங்கு போயும் அவன் திருந்தவில்லை. அந்த வார்த்தை அவன் வாயிலிருந்து வந்து கொண்டுதான் இருந்தது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முதலில் அந்த வார்த்தை புரியாததாலும், அதன் அர்த்தம் சரியாகத் தெரியாததாலும் ஆரம்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. நாளடைவில் அவன் வயதொத்த மற்ற சிலரும் அந்த வார்த்தையை உச்சரிக்கத் தொடங்க, பின்னர் அதன் அர்த்தம் தெரிய வந்தததும், ராமுவை கண்டிக்க ஆரம்பித்தனர். ராமுவின் பெற்றோரிடமும் புகார் செய்தனர்.

ராமுவின் பெற்றோருக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று. வேறு வழியில்லாமல், அருகில் உள்ள கோயிலில், ஆலய உதவியாளனாய் அவனைச் சேர்த்து விட்டனர். இந்த மாதிரி, கோயில், மந்திரம், சாமி என்றாலாவது பையன் திருந்துவான் என்பது அவர்கள் நம்பிக்கை. பூசாரிக்கு உதவுவது, மணியடிப்பது, தரிசனம் செய்ய வருபவரை, லைனில் வருமாறு ஒழுங்குபடுத்துவது, பிரசாதம் தருவது என்பன அவன் வேலைகள்.

அவனும் மிகுந்த கட்டுப்பாடோடு தான் நடந்து கொண்டான். ஆயினும் என்ன? வழக்கம் போல் அவனையும் மீறி அந்த வார்த்தை வரத்தான் செய்தது.

அதுவும்...
'........... லைன்ல வா'
'........... சத்தம் போடாதே'
'........... அர்ச்சனையா பண்ணனும்'
'........... இந்தா பிரசாதம்'

...என்றெல்லாம் அவன் வாயிலிருந்து வெளிவந்ததும், அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை நையப் புடைக்க ஆரம்பித்தனர். அந்த வேலையையும் அவன் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இறுதியில் அவன் பெற்றோரின் முயற்சியால் அது தடுக்கப்பட்டது. அவன் பெற்றோர்கள் ஆலய இறைவனை மனமுருக வேண்டினர். தங்கள் மகனைத் திருத்துமாறு மனமுருகப் பிரார்த்தித்தனர்.

இறைவனும் திருவுளம் இறங்கினான். அவர்கள் கனவில் தோன்றி "நாளை எல்லாப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும்" என்று திருவாய் மலர்ந்தருளினான்.

மறுநாள் பொழுது விடிந்தது. ராமு வழக்கம் போல ஆலயத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் வந்து பிரசாதம் கேட்கவும், எடுத்துக் கொடுக்க முற்பட்டான். அவனையும் அறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது. "........... பிரசாதம்.."

அவ்வளவுதான் கடவுளுக்கு அளவற்ற சினம் ஏற்பட்டது. ' தன்னுடைய சன்னதியிலேயே, இவ்வாறு வரைமுறை இல்லாமல் இவன் நடக்கக் காரணம், வாயைத் திறந்து பேசுவதனால் தானே, நாவு என்ற ஒன்று இருப்பதால் தானே, இவனை முழுக்க ஊமையாக்கி விட்டால்...' நினைத்த கடவுள் தனது குண்டாந்தடியை கடும் சீற்றத்துடன் அவன் கழுத்தை நோக்கி எறிந்தார்.

அந்த நேரம் பார்த்து அவன் கையில் வைத்திருந்த எலுமிச்சம்பழம் கீழே விழ, அதை அவன் எடுக்கக் குனிந்தான்.

இறைவனின் குறி தவறியது. குண்டாந்தடி வெறும் சுவற்றின் மீது மோதிக் கீழே விழுந்தது.


கடவுள் சொன்னார்:

"'........... ஜஸ்ட் மிஸ்..."

*************************************************************************************

நீதி: கடவுளே ஆனாலும், பழக்க வழக்கங்களின் பாதிப்பிலிருந்து ஒருவர் தப்பிவிட இயலாது.

*************************************************************************************

No comments: