முதல் பாகம் இங்கே....
“அய்யோ... அய்யோ... அய்யய்யய்யோ!”
...சத்தம் கேட்டதும், “ஓவ்வ்! ஓவ்” என்று உளறிக் கொண்டே திடுக்கிட்டு எழுந்த கடவுளுக்கு, தாம் எங்கிருக்கிறோம், என்ன நடந்தது என்பதே முதலில் சற்றுப் புரியவில்லை. சில நிமிடம் வரை என்னது! என்னது! எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிய வந்தது, குடுமி இல்லாத அம்பி, தனது குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல், டி.வியை, வேண்டும் என்றே அலற வைத்திருக்கிறான் என்பது.
டி.வியில் ஏதோ ஒரு பாடல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது, ஆணும் பெண்ணுமாய் அரைகுறை ஆடைகளில் குனிந்து, நிமிர்ந்து, கன்னா பின்னாவென்று குதித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கடவுளுக்கு மேலும் ஆத்திரமாய் வந்தது.
“இந்த எழவுக்குத் தான் அப்போவே மன்மதனை எரிச்சுத் தொலைச்சேன், ஆனா என்ன பிரயோசனம்! எல்லாம் ரதியால கெட்டது” என்றார்.
“அய்யோ மாமா! உளறாதீங்கோ, இது ‘மன்மதன்’ இல்ல, ரதி இதுல நடிக்கவும் இல்ல. இது சிம்பு நடிச்ச ‘சிலம்பாட்டம்’ படம். ‘மன்மதன்’, ‘சிம்பு- ஜோதிகா’ நடிச்ச படம். நீங்க சினிமால்லாம் பாக்கவே மாட்டேளா” என்றான் அம்பி.
“வாழ்க்கையே ஒரு சினிமா தானேப்பா” என்றார் கடவுள்.
“ஆமா, ஆமா, அப்போ எல்லாம் நாடகம்னாங்க, இப்போ சினிமான்றாங்க அவ்வளவு தான் வித்தியாசம்”
“ஆமா, நீ என்ன படிக்கிறயா, வேலை பாக்கறயா?”
“இரண்டுமே செய்றேன்”
“ஆஹா, பேஷ், பேஷ், ஆமா என்ன படிக்கிறே?”
“பள்ளிக்கூடத்துல பாடமும் படிக்கறேன், ஆத்துல வேதமும் படிக்கறேன், நேரம் இருக்கறப்போ அப்பாவுக்கு ஒத்தாசையா கோவில்ல வேலையும் செய்றேன். அதோ அந்த போட்டோல, என் கூட இருக்கிறது தான் எங்க அக்கா. பெங்களூர்ல இருக்கா. கால் செண்டர்ல வேலை பார்க்கறா. அவ தான் மாசா மாசம் நான் படிக்கப் பணம் அனுப்பறா. நான் கலெக்டருக்குப் படிக்கப் போறேன் மாமா!”
“சமத்து, குழந்தைகள்னா இப்படி இல்ல இருக்கனும்!”
“ஆமா, உங்க பசங்க என்ன பண்றாங்க மாமா!”
“அவாளைப் பத்திப் பேச்சே எடுக்காத, ஆமா, எனக்குக் கெட்ட கோபம் வரும். எல்லாம் தகப்பனுக்கு மீறினதுங்க!”
“ஒகோ, கோபத்துல நல்லது. கெட்டதுன்லாம் வேற இருக்கா மாமா!”
“என்னடா இது, பெரியவாள் கிட்ட மட்டு மரியாதை இல்லாமப் பேசிண்டு” என்றபடியே உள்ளே நுழைந்தார் கணபதி சாஸ்திரிகள்.
“வாங்கோ, வாங்கோ, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா பொழுது போகப் பேசிண்டு இருந்தான் அம்பி. என்னடா நாழியாச்சே இன்னும் காணோமேன்னு பார்த்தேன். வந்துட்டேள்”. என்றார் கடவுள்.
“ஆமா, ஆமா, அம்மாடி செத்த இலையைப் போடு, சாயரக்ஷைல நிறைய வேலை இருக்கும் போல இருக்கு” தனக்குள் அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.
“என்ன இன்னிக்கு ஒரு நூறு ரூபாயாவது வந்திருக்குமா வரும்படி உங்களுக்கு” மகிழ்ச்சியுடன் வினவினார் கடவுள்.
“அடக் கடவுளே! நன்னாக் கேட்டேள் போங்கோ, இது ரொம்பப் பழங்கால, சாதாரண, சின்னக் கோயில் சுவாமின்! பெரும்பாலும் அக்கம் பக்கத்துல உள்ள ஏழை, பாழைகள் தான் வருவா. அவா கையில என்ன இருக்கோ, அதை அவா மனசுக்கு ஏத்த மாதிரி உண்டியல்லயோ, தட்டுலயோ போட்டுட்டுப் போவா! மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல. 5ம் வரும். 10 வரும். சில சமயம் ரொம்ப விசேஷ நாள்னா 50, 100 வரலாம். என்னவோ போங்கோ, சிலரை ஆகா, ஓகோன்னு ஆகாசத்துக்குத் தூக்கற அதே கடவுள்தான், சிலரை அப்படியே கீழேயே வச்சிருக்கான். என்ன காரணமோ யாருக்குத் தெரியும்? எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.” என்றார் கணபதியார்.
“எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும் சுவாமின், நமக்கு என்ன தெரியும்?” என்றார் கடவுள் புன்சிரிப்புடன்.
’ஆமா... ஆமா... அச்சரிதான்’ என்றார் கணபதியார்.
’சரி... சில பேர் கோயில் உண்டியல்ல கை வக்கிறது, சுவாமி நகைல கை வக்கறதுன்லாம் செய்யறாளே, அது பத்தி நீங்க என்ன நினைக்கறேள்!’ என்றார் கடவுள்.
‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்றது, நம்பினவாளுக்கு துரோகம் பண்றது எவ்வளவு பெரிய குத்தமோ, பாவமோ அதே மாதிரி தான் அதுவும். அதுவும் சுவாமி நகைளலாம் கை வச்சா விமோசனமே இல்ல... ஆனா....’
‘ஆனா... என்ன ஆனா...’
‘மனுஷாளுக்குன்னு பொதுவா உள்ள நம்ம சட்டங்கள் வேற... தெய்வ சட்டங்கள் வேற.... சிலது சட்டப்படி தப்பா இருக்கலாம். ஆனா தர்மப்படி சரியா இருக்கலாம். அது அவா அவாளோட நோக்கங்களயும், சூழலயும் பொறுத்தது. ஆனா எப்படிப் பாத்தாலும் தப்பு தப்பு தான். இல்லையா!’ என்றார் கணபதி.
‘ஆமா... ஆமா...’ என்றார் கடவுள் ஏதோ யோசித்தவாறே!.
‘என்ன யோசனை சுவாமின்...’
‘இல்ல... கோயில் நகைய எடுத்ததுக்கு இவ்ளோ கூச்சல் குழப்பம். ஆனா ஆண்டாண்டு காலமா கோயில் சொத்தை, நிலத்தை, இடங்களை எத்தனையோ பேர் தலை தலைமுறையா அனுபவிச்சிண்டு வர்றா... அதைப் பத்தி யாருமே வாயத் திறக்கறதில்லையே ஏன்? அதைத் தான் யோசிக்கிறேன்’
‘நாம என்ன சுவாமி பண்ண முடியும், ஏழை சொல் அம்பலமேறாது. ஆனா அதை அந்தக் கடவுள் பாத்துண்டும் சும்மாதானே இருக்கான். ஆனா ரொம்பப் பேர் மறந்துடறா... சிவன் சொத்து குல நாசம்ங்கறத. சொத்து சின்னதோ பெரிசோ அது பிரச்சன இல்ல. எடுக்கறது பெரிய பாவம். அது குருக்களா இருந்தாலும் சரி... குத்தகைப் பார்ர்ட்டியா இருந்தாலும் சரி. அது அவங்க தலைமுறையத் தான பாதிக்கும்.’
’ஏதாவது பரிகாரம் பண்ணி தப்பிடுச்சிவாங்கப்பா...’ குறுக்கில் புகுந்தான் அம்பி.
‘எல்லா பாவத்துக்கும் பரிகாரம் பண்ண முடியாதுடா குழந்தே! அப்படிப் பண்ணாலும் பலன் இருக்காது. மனுஷங்களை ஏமாத்தலாம். கடவுளை, தர்மத்தை ஏமாத்தவே முடியாது.’ என்றார் கணபதியார்.
’ஆமா, ஆமா... படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் அய்யோன்னு போவான்... அய்யோன்னு போவான்... என்றார் கடவுள்’ கண்களை உருட்டி விழித்தவாறே.
’அப்போ படிக்காதவன் பாவம் பண்ணினால்...’ அம்பி கிண்டலாகக் கேட்டான்.
’பாவத்தின் சம்பளம் மரணம்’ என்றார் கடவுள் இரு கைகளையும் தூக்கி ஆசிர்வாதம் செய்வது போன்று.
’சரி.. சரி வாங்கோ எல்லோரும் சாப்பிடலாம்’ என்றார் கணபதியார்.
எல்லாரும் மதிய உணவை உண்டுவிட்டு, களைப்பு தீரத் திண்ணையில் அமர்ந்தனர்.
“இந்தாங்கோ சுவாமின், கும்பகோணம் வெத்திலை! உங்களுக்கு வெத்திலை போடற பழக்கம் உண்டோன்னோ?” என்றார் கணபதியார்.
“ஆகா, பேஷா, அதான் அர்ச்சனை பண்ணும் போதே அதையும் சேர்த்து வச்சிடறாளே அப்புறம் எப்படி சாப்பிடாம இருக்க முடியும்?” என்றார் கடவுள்.
“உண்ட மயக்கம், அதான் அர்ச்சனை, நைவேத்தியம்னு ஏதேதோ உளர்றேள், அது போகட்டும், ஏன் எப்போ பார்த்தாலும் கோவில், பிரசாதம், நைவேத்தியம் அப்படின்னே பேசிண்டு இருக்கேள்?”
“அது ஒண்ணுமில்லை! ஹி! ஹி!” என்றார் கடவுள்.
” சரி! சரி! செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, சாயந்திரம் காப்பி ஆனதும், நீங்க எங்க போணுமோ அங்க அம்பியை விட்டு, பஸ் ஏத்தி விடச் சொல்றேன். சரியா?”
“சரிதான்னா!” நீங்க சொல்லிட்டேள்னா சரி”, சொல்லிவிட்டு அப்படியே திண்ணையில் சாய்ந்து, மீண்டும் மெல்லத் தூக்கத்தில் ஆழ்ந்தார் கடவுள்.
எல்லாரும் மதிய உணவை உண்டுவிட்டு, களைப்பு தீரத் திண்ணையில் அமர்ந்தனர்.
“இந்தாங்கோ சுவாமின், கும்பகோணம் வெத்திலை! உங்களுக்கு வெத்திலை போடற பழக்கம் உண்டோன்னோ?” என்றார் கணபதியார்.
“ஆகா, பேஷா, அதான் அர்ச்சனை பண்ணும் போதே அதையும் சேர்த்து வச்சிடறாளே அப்புறம் எப்படி சாப்பிடாம இருக்க முடியும்?” என்றார் கடவுள்.
“உண்ட மயக்கம், அதான் அர்ச்சனை, நைவேத்தியம்னு ஏதேதோ உளர்றேள், அது போகட்டும், ஏன் எப்போ பார்த்தாலும் கோவில், பிரசாதம், நைவேத்தியம் அப்படின்னே பேசிண்டு இருக்கேள்?”
“அது ஒண்ணுமில்லை! ஹி! ஹி!” என்றார் கடவுள்.
” சரி! சரி! செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, சாயந்திரம் காப்பி ஆனதும், நீங்க எங்க போணுமோ அங்க அம்பியை விட்டு, பஸ் ஏத்தி விடச் சொல்றேன். சரியா?”
“சரிதான்னா!” நீங்க சொல்லிட்டேள்னா சரி”, சொல்லிவிட்டு அப்படியே திண்ணையில் சாய்ந்து, மீண்டும் மெல்லத் தூக்கத்தில் ஆழ்ந்தார் கடவுள்.
(தொடரும்)
இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த நண்பருக்கு நன்றி
No comments:
Post a Comment